கடந்த வாரம் தொடர்ந்து மூன்று தினங்கள் ப்ளாக் அவுட் ஆனது ப்ளாக்பெர்ரி. இந்த நாட்களில் அந்த செல்போன் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
காரணம், மின்னஞ்சல், வங்கிப் பரிவர்த்தனைகள், ஃபேஸ்புக் என பல்வேறு பயன்பாடுகளுக்கும் இவர்கள் இந்த ப்ளாக்பெர்ரியை மட்டுமே நம்பியிருந்ததுதான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு படிப்படியாக ப்ளாக்பெர்ரி சேவைகள் பழைய நிலைக்குத் திரும்பின. ஆனால் இந்த மூன்று நாட்களும் பட்ட அவதியை எப்படி ஈடுகட்டுவது? வாடிக்கையாளர்கள் பொறுமையோடு இதை சகித்துக் கொண்டதற்கு என்ன பரிசு?
இதற்கு உடனடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது ப்ளாக்பெர்ரியைத் தயாரித்து வழக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம். அதன்படி உலகமெங்கும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 100 டாலர்கள் இழப்பீடாக வழங்குவதாகக் கூறியது. இந்த இழப்புத் தொகை பணமாக இல்லாமல், செல்போனில் சார்ஜ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் ப்ளாக்பெர்ரி சேவை வழங்கும் டெலிபோனிகா நிறுவனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் கட்டணத்தைக் கணக்கிட்டு வாடிக்கையாளர் கணக்கில் சேர்த்துவிட்டது.
யுஏஇ நாட்டில் இந்த சேவையை அளிக்கும் எடிசாலட், சேவை பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதோடு, கூடுதலாக மூன்று தினங்களுக்கு இலவசமாக சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளன.
ஆனால், ப்ளாக்பெர்ரி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் போன்றவர்கள் மட்டும் இந்த இழப்பீடு பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள்!
இத்தனைக்கும் யுஏஇ போன்ற நாடுகளில் உள்ளதை விட இரு மடங்கு ப்ளாக்பெர்ரி வாடிக்கையர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏர்டெல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கு எந்த வகையில் நஷ்ட ஈடு தரப்போகிறார்கள் என்பதை இதுவரை அறிவிக்கவே இல்லை.
இதுகுறித்து ப்ளாக்பெர்ரி நிறுவனத்திடம் விசாரித்தபோது, பதில் கூறாமல் மழுப்பியுள்ளனர். எங்கள் பார்ட்னர் நிறுவனங்களோடு தொடர்புடைய விஷயங்களை பேசுவதாக இல்லை என்று மட்டும் பதில் கூறிவிட்டது அந்த நிறுவனம்.
வோடபோன் நிறுவனமும் இதுகுறித்து எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் சண்டைபோட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மட்டும் இழப்பீடாக மூன்று ப்ளாக்பெர்ரி செட்களை கொடுத்து அமைதியாக்கிவிட்டார்களாம். அந்த நிறுவனம் அதிக அளவில் வோடபோன் ப்ளாக்பெர்ரியை பயன்படுத்தியதால் இந்த சலுகையாம்!
ஏர்செல், ரிலையன்ஸ் போன்றவையும் ப்ளாக்பெர்ரி சேவை அளித்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையர் இருப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.
ப்ளாக்பெர்ரியின் வருமானம் அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் குறைந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வருவாயைக் கொட்டும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் பெப்பே காட்டியுள்ளது எந்த வகை நியாயம் என்கிறார்கள் ப்ளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள்!