சட்டசபையில் நேற்று விஜயகாந்த் பேசிய விதம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த யாருமே இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பது அந்தப் படத்தைப் பார்த்தாலே தெரிகிறது.
அந்த அளவுக்கு கடும் கோபத்துடன்,விட்டால் அடித்து விடுவார் போல என்று அஞ்சும் அளவுக்கு அந்தக் காட்சி இருக்கிறது.
சட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறுகிறார். சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்காருகின்றனர்.
சில விநாடிகளில் திடீரென தனது சீட்டிலிருந்து வேகமாக எழுகிறார் விஜயகாந்த். படு ஆவேசமாக ஆளுங்கட்சித் தரப்பைப் பார்த்து கையை உயர்த்தி ஏதோ பேசுகிறார். அவரது கண்களில் கோபம் கொப்புளிக்கிறது. பின்னர் தனது ஸ்டைலில் உதட்டை மடித்து மிரட்டுவது போல பேசுகிறார். நாடி நரம்பு புடைக்க கோபமாக பேசுகிறார்.
இந்தக் காட்சியை அவரது கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் படு அமைதியாக, பார்த்துக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெல்லிய புன்னகையுடன், விஜயகாந்த் மிரட்டுவதையும், ஆளுங்கட்சி பதில் மிரட்டல் விடுப்பதையும் மாறி மாறிப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் துரைமுருகன் படு பீதி கலந்த முகத்துடன் விஜயகாந்த்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அவையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
http://famousstills.blogspot.com
http://famousstills.blogspot.com
0 comments:
Post a Comment